test

R P

Sunday, 13 March 2016

இந்தியாவில் 13 சதவீத பள்ளிக் குழந்தைகளுக்கு கிட்டப்பார்வை:ஆய்வில் தகவல்


நாடு முழுவதிலுமாக பள்ளி செல்லும் குழந்தைகளில் 13 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு கிட்டப்பார்வைக் குறைபாடு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள ராஜேந்திர பிரசாத் கண் சிகிக்சை அறிவியல் மையம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதுகுறித்து அதன் தலைவர் அதுல் குமார் கூறியதாவது:

இந்தியாவில் தற்போது பள்ளி செல்லும் குழந்தைகளில் 13 சதவீதத்திற்கும் அதிகமானோர் கிட்டப்பார்வை குறைபாட்டுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 7 சதவீதமாக இருந்த இக்குறைபாடுள்ள குழந்தைகளின் வீதம், தற்போது இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதற்கு, விடியோ கேம்கள், செல்லிடப்பேசிகள், டேப்ளட்டுகள், கணினி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் அதிகமான பயன்பாடே காரணமாகும்.

கிட்டப்பார்வைக் குறைபாட்டை நுட்பமாகக் கூறுவதானால், விழிக்குள் ஊடுருவம் ஒளியானது நேரடியாக விழித்திரையில் (ரெட்டினா) படாமல் அதற்கு முன்பாக விழுவதாகும்.

இதன்படி, இக்குறைபாடு உடையவர்கள் தூரத்தில் இருக்கும் பொருள்களைக் காணும்போது அது அவர்களுக்கு தெளிவாகத் தெரிவதில்லை. மாறாக, அருகில் இருக்கும் பொருள் நன்றாக தெரியும். இந்தியாவில் கண் பிரச்னைகள் தொடர்பாக குறைவான அளவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும், கிட்டப்பார்வை குறித்தும் மிகவும் அரிதாகவே ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பிரச்னைகள் தொடர்பாக தேசிய அளவிலான ஆய்வு ஒன்றை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

அதில், வயது ரீதியான தசைச் சிதைவுகளுக்கு ஸ்டெம் செல்களை பயன்படுத்துவது, உலக வெப்பமயமாதல் மற்றும் புற ஊதாக் கதிர் வீச்சு போன்றவற்றால் கண் பார்வையில் ஏற்படும் பாதிப்புகள் போன்றவை தொடர்பாகவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம் என்று அதுல் குமார் கூறினார்.

கண் பார்வை தொடர்பான சிகிச்சைகளுக்காக கடந்த 1967ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ராஜேந்திர பிரசாத் கண் சிகிச்சை மையம், தற்போது 14 ஆய்வகங்களுடன் இயங்கி வருகிறது.

0 comments:

Post a Comment